தமிழ்நாடு

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரெயில் கட்டணம் குறைப்பு

Published On 2024-02-27 02:30 GMT   |   Update On 2024-02-27 06:06 GMT
  • கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • தென்னக ரயில்வேயில் பயணிகள் ரெயிலுக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நகரப் பகுதிகளோடு கிராமப்புற மக்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பாசஞ்சர் ரெயில் என்று கூறப்படும் இந்த ரெயில்கள் எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

முக்கிய நகரங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்குள் மட்டும் சென்று வரும் ரெயில்களில் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தினர். விவசாய விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் இது உதவுவதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த உணவு பொருட்களை நகரப்பகுதிகளுக்கு கொண்டு வருவது வழக்கம்.

எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் ரெயில்களுக்கு கிராம மக்கள் இடையே அதிக வரவேற்பு இருந்தது.

இதற்கிடையே, கொரோனா காலத்தில் பயணிகள் ரெயில், மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டது. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது அப்போது எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கொரோனா காலத்தில் பெரிதாக பேசப்படவில்லை. கடந்த 3 ஆண்டாக மெயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 21-ம் தேதியில் இருந்து இது மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

நாடு முழுவதும் உள்ள மெயில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களாக மாற்றப்பட்டதால் கட்டணமும் குறைந்தது. தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட டிவிஷன்களில் இயக்கப்படும் இத்தகைய ரெயில்களில் இனி சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

இதுவரையில் மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்புக்கு பிறகு பயணிகள் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News