தமிழ்நாடு செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர்.

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2023-06-23 11:31 IST   |   Update On 2023-06-23 11:31:00 IST
  • கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
  • சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர், புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்த திருமணமான பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து அந்த பெண்ணுக்கு போன் செய்து, ஆபாசமாக பேசி அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

உடனே பெண்ணின் கணவர் இது குறித்து சுதாகரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணும், அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று இதுகுறித்து புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் எஸ்.பி. பாலாஜி சரவணன் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து, உடனடியாக விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News