தமிழ்நாடு

தம்மம்பட்டியில் களை கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள்-400 வீரர்கள் பங்கேற்பு

Published On 2024-02-25 09:39 GMT   |   Update On 2024-02-25 09:39 GMT
  • முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது.
  • சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, உலிபுரம், தலைவாசல், மங்கபட்டி, கடம்பூர், ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகள் கலந்து கொண்டன. 400 மாடுபிடி வீரர்கள் 4 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடுபிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து மைதானத்தில் விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்து மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.

இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கும் கரகோஷம் எழுப்பினார்கள்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ. 1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. விழா குழு சார்பாக டிரஸ்ங் டேபிள், பட்டு புடவை, வெள்ளி நாணயம், மின்விசிறி, தென்னங்கன்று போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Tags:    

Similar News