தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரெயில் இயக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2023-03-19 12:51 IST   |   Update On 2023-03-19 13:14:00 IST
  • சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது.
  • தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் ரெயில் சேவைகள் அதிகரிக்கப்படவில்லை.

தாம்பரம்:

சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, சென்ட்ரல்-திருவள்ளூர்-திருத்தணி- அரக்கோணம் மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த கட்டணம், விரைவு பயணம் என்பதால் புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்குள் வந்து செல்ல பெரும்பாலும் மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.

இதற்கிடையே தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீட்டர் தூரத்துக்கு 3-வது ரெயில் பாதை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் ரெயில் வேகமும் 100 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டது.

ஆனால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுதல் ரெயில் சேவைகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதையை பயன்படுத்தி கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு அதிக ரெயில்கள் உள்ளன. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரெயில் சேவை போதுமானதாக இல்லை.

இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் தாம்பரம் வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. செங்கல்பட்டு-தாம்பரம் வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை குறைந்தது 3 அல்லது 4 மின்சார ரெயில் சேவைஇயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3-வது ரெயில் சேவை தயார் நிலையில் உள்ளதால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News