களக்காடு தலையணையில் 1 வாரத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
- 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 22-ந் தேதி இடி-மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று களக்காடு, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 13 மில்லிமீட்டரும், ராதாபுரம் மற்றும் நாங்குநேரியில் தலா 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணை நீர்மட்டம் 106.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 766 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக 507 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியை எட்டியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக காலம் இருப்பதால் அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
களக்காட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைகளை பொறுத்தவரை குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை 76.80 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை 77 அடியாகவும் உயர்ந்துள்ளது.
குற்றாலத்தில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக புதியம்புத்தூர் அருகே கவர்னகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவை பிஞ்சு பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகர பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடப்பதாக குடியிருப்பு வாசிகள் புகார் கூறி வருகின்றனர்.
உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்களது சைக்கிளில் ஊர்ந்தபடி சென்றனர். குலசேரகன்பட்டினம், மணப்பாடு, தேரியூர், செட்டியா பத்து, தாண்டவன்காடு, பரமன்குறிச்சி, பிச்சிவிளை, வேப்பங்காடு உள்ளிட்ட கிராமங்களில் காலை 8 மணி முதல் கனமழை பெய்தது.