கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர்.
- கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர்.
இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற மகளும் உள்ளனர். கார்த்திகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சக்கரவர்த்தி வேலை விஷயமாக அன்னூருக்கு சென்று விட்டார். அங்கு வேலைகள் இருந்ததால் சில நாட்கள் அங்கேயே தங்கி விட்டார்.
இதனால் வீட்டில் ஜெகதீஷ்வரியும், அவரது மகளும் மட்டுமே தனியாக இருந்து வந்தனர். அவ்வப்போது சக்கரவர்த்தி போன் செய்து, மனைவி மற்றும் மகளிடம் பேசி வந்தார்.
ஜெகதீஷ்வரி தினமும் தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதும், பள்ளி முடிந்த பின்னர் திரும்ப சென்று அழைத்து வருவதும் வழக்கம்.
அதன்படி நேற்றும் மகளை காலையில் பள்ளியில் கொண்டு விட்டு வந்தார். பின்னர் வீட்டில் அவர் மட்டும் இருந்தார்.
காலை 11.30 மணிக்கு ஜெகதீஷ்வரிக்கு, அவரது கணவர் சக்கரவர்த்தி போன் செய்து பேசினார். பின்னர் மதியமும் சக்கரவர்த்தி போன் செய்தார். ஆனால் ஜெகதீஷ்வரி எடுக்கவில்லை. அவர் வேலையாக இருக்கலாம் என நினைத்து சக்கரவர்த்தி தனது வேலையில் மூழ்கி விட்டார்.
இந்த நிலையில் தினமும் தன்னை அழைத்து செல்ல பள்ளிக்கு வரும் தாய், நேற்று நீண்ட நேரமாகியும் வராததால் ஜெகதீஷ்வரியின் மகள் கார்த்திகா நடந்தே வீட்டிற்கு வந்து விட்டார்.
அப்போது வீடு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியான கார்த்திகா வீட்டிற்குள் சென்று அம்மாவை தேடினார். எங்கும் அவர் இல்லை. கடைசியாக அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு அறையில் உள்ள கட்டிலில் ஜெகதீஷ்வரி பிணமாக கிடந்தார்.
இதை பார்த்ததும் கார்த்திகா கதறி அழுதபடி வெளியில் ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சென்று பார்த்தனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து சக்கவரத்தியும் அன்னூரில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
மேலும் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது அவரது கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது. வீட்டில் இருந்த செயின் உள்பட 5 ¾ பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.
இதனால் இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து, ஜெகதீஷ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்தது யார்? என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. மர்மநபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசாருக்கு இந்த கொலையானது நகைக்காக தான் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே போலீசார் அந்த கோணத்திலும் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
மேலும் இறந்த ஜெகதீஷ்வரியின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவர் யார், யாருடன் பேசியுள்ளார். கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்பதை பார்த்து, அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த தகவல்களையும் சேகரிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.