தமிழ்நாடு செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் இன்று நீர்வரத்து குறைந்துள்ள காட்சி.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

Published On 2022-11-19 11:20 IST   |   Update On 2022-11-19 11:20:00 IST
  • மெயினருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
  • இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

நெல்லையில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 93.30 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருந்ததால் இன்று காலை மேலும் 3 அடி உயர்ந்து 96.30 அடியை எட்டியது.

இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 21 அடி உயர்ந்து நேற்று 111 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 3 அடி உயர்ந்து 114.34 அடியானது. மணிமுத்தாறில் 78.80 அடி நீர் இருப்பு உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததாலும், பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.

இந்நிலையில் கடனா அணை தனது முழுகொள்ளளவான 85 அடியில் 83 அடியை எட்டியதால் அந்த அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாகவும், மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையாலும் நேற்று தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. நேற்று மழை பெய்யாததால், இன்று காலை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது. மழை பெய்யவில்லை. ஒரு சில இடத்தில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவில் மழை வெகுவாக குறைந்தது.

இதனால் மெயினருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதில் ஐய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News