விருதுநகரில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
- போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தற்கொலை செய்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது.
விருதுநகர்:
விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ். தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(வயது 41). இவர் அதேபகுதியில் பெயிண்ட கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அருணா மகேசுவரி(37). இவர்களுக்கு அர்ச்சனா ஸ்ரீ(17), மேகாஸ்ரீ (14) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கார்த்திக்ராஜா கடன் பிரச்சினை காரணமாக விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 2 மகள்களும் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு தூங்க சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை வீட்டுக்கு வந்தனர். ஆனால் கதவு திறக்கப்படாமல் இருந்தது. 2 பேரும் பலமுறை கதவு தட்டியும் எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விருதுநகர் பஜார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக்ராஜா, அவரது மனைவி அருணா மகேசுவரி இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தற்கொலை செய்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் பிரச்சினை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பெற்றோரின் உடல்களை பார்த்து 2 மகள்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.