தமிழ்நாடு

இறந்த கோவில் மாட்டுக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

Published On 2024-03-29 10:34 GMT   |   Update On 2024-03-29 10:34 GMT
  • பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
  • முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்:

குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது51). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கண்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கண்ணன் நீண்ட நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்துள்ளார்.

இதற்காக வழிபாடு நடத்திய குப்புசாமி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பசு மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் பசுமாட்டை அழைத்து சென்று வழிபாடு செய்துள்ளார்.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணன் வாய் பேச தொடங்கி உள்ளார். இதனால் குப்புசாமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் அப்பகுதி கிராம மக்கள் பசுமாட்டை கோவில் மாடாக நினைத்து வணங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பசு திடீரென உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குப்புசாமி வீட்டு முன்பு ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு பசுமாட்டை குளிப்பாட்டி அலங்காரம் செய்து பூமாலையிட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.

முன்னதாக தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அர்ச்சனைக்கு பின்னர் தோட்டத்து நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த பசுமாடு இதுவரை 10 கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.

கன்று குட்டிகளுக்கே கொடுத்து விடுவார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பசுமாட்டு பாலை இலவசமாக கொடுத்து வந்துள்ளார். முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பசுமாடு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News