இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை தூக்கிசெல்லும் கிராம மக்களை படத்தில் காணலாம்.
வேப்பூர் அருகே ஆற்று பாலம் உடைந்ததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி சென்ற மக்கள்
- நகர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
- முருகேசன் உடலை நேற்று அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு பாடை கட்டி தூக்கி சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் கோமுகி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்கபட்டிருந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் வடக்கு பகுதியில் அடித்து சென்றதால் பாதிபாலம் இடிந்து விழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நல்லூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நகர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது உடலை நேற்று அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு பாடை கட்டி தூக்கி சென்றனர்.
அப்போது கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள வழியாக இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மயானத்திற்கு சென்றனர். ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வயதானவர்களும் குறைந்த வயது உள்ளவர்களும் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கரையிலேயே நின்றுவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நகர் கிராமத்திலுள்ள கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.