வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்துவதா? வைகோ கண்டனம்
- ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது.
- கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த சிலர் கடந்த 17-ந்தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர்.
ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது 30 பேர் கும்பல் கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்தனர். ஜெபம் முடிந்து 6பேர் வெளியில் வந்தனர். அப்போது அவர்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.
கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களை தாக்கியவர்கள் இந்து முன்னணியினர் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது.
கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு மத கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.