தமிழ்நாடு செய்திகள்

ரூ.131 கோடி செலவில் தி.நகர் உஸ்மான் ரோடு மேம்பாலம் நீட்டித்து கட்டப்படுகிறது

Published On 2022-10-12 16:13 IST   |   Update On 2022-10-12 16:13:00 IST
  • சென்னை மாநகராட்சி ரூ.131 கோடி செலவில் தி.நகர் உஸ்மான் ரோடு மேம்பாலத்தை நீட்டித்து கட்டுவதற்கு பணிகளை தொடங்கி உள்ளது.
  • தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது.

சென்னை:

சென்னையின் வியாபார பகுதியாக திகழும் தி.நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின் போது ரூ.19.80 கோடி மதிப்பில் போத்தீஸ், சரவணா ஸ்டோர் அருகே உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் அமைக்கப்பட்ட காரணத்தால் அந்த ரோட்டில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த மேம்பாலத்தை தி.நகர் பஸ் நிலையத்தை கடந்து செல்லும் வகையில் மேலும் நீட்டித்து கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரூ.131 கோடி செலவில் தி.நகர் உஸ்மான் ரோடு மேம்பாலத்தை நீட்டித்து கட்டுவதற்கு பணிகளை தொடங்கி உள்ளது. இதற்காக தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது.

அதாவது ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் மேம்பாலம் ரோட்டை 'கட்' செய்து தகர்த்து எடுத்து விட்டு 'பில்லர்' அமைத்து பஸ் நிலையத்தை தாண்டி பாலம் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

இதில் தி.நகர் எம்.எல்.ஏ. அலுவலகம், சிவ விஷ்ணு கோவில் அருகே மேம்பாலத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இறங்கவும் மேம்பாலத்தில் பஸ்கள் ஏறவும் இருபுறமும் பக்கவாட்டில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த மேம்பால பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'பில்லர்' அமைக்க பஸ் நிலையம் அருகே மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 55 தூண்களுடன் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாக அமைய உள்ளது.

இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வாகனங்கள் நிற்காமல் பாலத்தில் சென்றுவிடும். மேம்பால பணிகளை விரைந்து முடிக்க இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை கலந்து காம்போசைட் கர்டர் முறையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

அதாவது தூண்கள் அமைக்கும் பணிகள் மட்டும் தி.நகரில் நடைபெறும். மற்ற கான்கிரீட் பணிகள் வெளி இடத்தில் செய்து முடித்து கொண்டு வந்து தூண்களில் பொருத்தி விடுவார்கள். இந்த மேம்பாலத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

Tags:    

Similar News