அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள்.
ராமேசுவரம்-தனுஷ்கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் அவர்கள் தங்களது பெற்றோருடன் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
- கடற்கரை பகுதியில் பக்தர்கள் இளைப்பாற போதிய நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம், தனுஷ்கோடி தீவு பகுதியில் அமைந்துள்ளன. ராமேசுவரம் கோவில் புண்ணிய திருத்தலமாக போற்றப்படுவதால் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தினமும் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்குள் தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. இந்த தீர்த்தங்களில் குளித்தால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் தீரும் என்று பக்தர்கள் கருதுவதால் அங்கு நீராடி சாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதேபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல் மற்றும் தனுஷ்கோடி கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் புனித நீராடுவார்கள். தனுஷ்கோடி பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றம் காரணமாக அழிந்து போன ஒரு நகரமாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் அங்கு சென்று பார்ப்பதை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் அவர்கள் தங்களது பெற்றோருடன் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்னி தீர்த்தக்கடலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கோடை வெயில் காரணமாக பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அவர்கள் கடற்கரை பகுதியில் பக்தர்கள் இளைப்பாற போதிய நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.