தமிழ்நாடு

டி.என்.பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை

Published On 2023-06-06 05:13 GMT   |   Update On 2023-06-06 05:13 GMT
  • சிறுத்தை ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற அடையாளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • சிறுத்தையால் தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகேயுள்ள அரக்கன்கோட்டை, செங்காட்டு தோட்டம், மோதூர் பிரிவு வனச்சாலை செல்லும் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (42). இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகள், மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கால்நடைகளுக்கு உணவு கொடுக்க வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது 5 ஆடுகளில் ஆறுமாதம் ஆன ஒரு ஆட்டுக்குட்டியை காணவில்லை.

உடனடியாக நாகேந்திரன் அப்பகுதியில் தேடி பார்த்து கொண்டே சென்ற போது அந்த வழியாக சிறுத்தை ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற அடையாளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே நாகேந்திரன் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

நாகேந்திரன் வீட்டில் இருந்து வனப்பகுதியை நோக்கி செல்லும் சாலையில் வனத்துறையினர் ஆய்வு செய்த போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆடு கடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது.

ஆட்டுக்குட்டியை கடித்து கொன்ற அடையாளங்களை வைத்து சிறுத்தை தான் ஆட்டுக்குட்டியை கொன்றதாக வனத்துறையினர் நாகேந்திரனிடம் தெரிவித்தனர்.

மேலும் நாகேந்திரன் வீட்டில் ஆடு மாடுகள் உள்ள இடத்தின் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்திய வனத்துறையினர், கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆட்டுக்குட்டியை கொன்ற நிலையில் சிறுத்தையால் தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News