திருவொற்றியூர் தி.மு.க. பிரமுகர் மகன் கொலையில் ஜெயிலில் உள்ள ரவுடிக்கு தொடர்பு?
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், விம்கோ நகர், பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க.வில் 5-வது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மகன் காமராஜ் (வயது35). என்ஜினீயரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான இவர்கள் ஆர்.வி.என்ஜினீயரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்களது அலுவலகம் வீட்டின் கீழ் பகுதியில் உள்ளது.
நேற்று காலை காமராஜ் மட்டும் அலுவலகத்தில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் அரிவாள், கத்தியுடன் அலுவலகத்திற்குள் புகுந்து காமராஜை கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் ரவுடிகும்மல் மாமூல் கேட்ட தகராறில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
எண்ணூர் பஜார் பகுதியில் நூலகம் கட்டும் பணியில் காமராஜ் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். கடந்த மாதம் எண்ணூரை சேர்ந்த ரவுடி ஒருவன் காமராஜை தொடர்பு கொண்டு பலலட்சம் பணம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக காமராஜ் முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே மாமூல் தகராறில் கூலிப்படை ஏவி கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காமராஜின் செல்போனில் பேசிய அந்த ரவுடி, ஏற்கனவே கடலூர் சிறையில் உள்ள எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். எனவே சிறையில் உள்ள ரவுடியின் தூண்டுதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சிறையில் உள்ள அந்த ரவுடி மீது மட்டும் கொலை, ஆள்கடத்தல், கொலைமுயற்சி உள்ளிட்ட 47 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் அவர் தொடர்ந்து வெளியில் உள்ள கூட்டாளிகளை தொடர்பு கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே காமராஜை ரவுடி மிரட்டும் செல்போன் ஆடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் காமராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பற்றிய விபரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த கொலை தொடர்பாக பழைய குற்றவா ளிகள் உள்பட 15 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடந்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது.அவர்களை அனைவரும் விரைவில் கைது செய்யப்ப டுவார்கள். அவர்கள் பின்னணி பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது என்றார்.