தமிழ்நாடு

சூடானில் உள்ள 160 தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை- மத்திய அரசுக்கு தகவல்கள் அளித்தது

Published On 2023-04-28 05:41 GMT   |   Update On 2023-04-28 05:41 GMT
  • இந்தியாவும் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
  • சூடானில் இருந்து வசதியான சிலர் தங்களது சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னை:

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள் நாட்டு போர் நடந்து வருகிறது.

அந்த நாட்டில் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுவதால் அங்குள்ள வெளிநாட்டினரை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவும் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ்.தர்காஷ் மற்றும் விமானப் படையின் விமானங்கள் மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் அங்கு பரிதவிக்கும் இந்தியர்களை சூடான் துறைமுகம் வர வழைத்து அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்து அதன்பிறகு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர்.

இதுவரை சூடானில் இருந்து சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதில் தமிழ்நாட்டிற்கு நேற்று 22 பேர் வந்துள்ளனர். இன்று 33 பேர் வரை வர உள்ளனர்.

இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

சூடானில் உள்நாட்டு போர் நடைபெறுவதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். சுமார் 400 பேர் வரை சூடானில் இருப்பதாக அறிந்தாலும் இதுவரை 160 பேர் தாயகம் வருவதற்காக பதிவு செய்துள்ளனர்.

அவர்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இன்னும் 2 நாளில் அவர்களை ஒருங்கிணைத்து தமிழகம் அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூடானில் கலவரம் ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் அங்குள்ள தமிழர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றி வருகிறது.

சென்னை, மதுரை, கோவைக்கு நேற்று 22 பேர் வந்தனர். இன்று 33 பேர் மீட்கப்பட்டு வர உள்ளனர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு, டிக்கெட் செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசு செய்து வருகிறது.

சூடானில் இருந்து வசதியான சிலர் தங்களது சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர். அவர்களுக்கும் உதவி தேவையா என கேட்டு அதன் அடிப்படையில் உதவி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News