தமிழ்நாடு செய்திகள்
ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்.

சத்தியமங்கலம் அருகே ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மாணவ- மாணவிகள்

Published On 2022-09-09 11:33 IST   |   Update On 2022-09-09 11:33:00 IST
  • கிராம மக்கள் தினந்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.
  • பொதுமக்களும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியை அடுத்துள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் தினந்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

தினமும் இருமுறை மட்டுமே அரசு பஸ் இயக்குவதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அதேபோல் மாக்கம்பாளையம், அருகியம், கோம்பை தொட்டியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தினமும் அரசு பஸ்சில் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாக்கம்பாளையம், அருகியம், கோம்பை தொட்டி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரமாக அரசு பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாக்கம்பாளையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் வாடகை டெம்போவிலும, வனப்பகுதியில் நடந்தும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்தும் பள்ளிக்கு செல்கின்றனர்.

இதே போல் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். மாணவ- மாணவிகள், பொதுமக்கள் காட்டாற்றை கடந்து செல்லும் போது ஒருவருக்கொருவர் கைகோர்த்து படி சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் பாலம் கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News