மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை: அடுத்த மாதம் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பள்ளி பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என ஸ்ரீமதியின் தாய் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் தாய் சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் கஜேந்திரன், விழுப்புரம் வக்கீல்கள் லூசியா, கேசவன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு ஓய்வுபெற்ற நீதிபதி நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் குற்றப்பத்திரிகை தொடர்பாக சில ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. எனவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.