தமிழ்நாடு

சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Published On 2022-08-30 04:37 GMT   |   Update On 2022-08-30 04:37 GMT
  • ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை:

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், தலைமை செயலாளராக பணிபுரிந்த ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் பரிந்துரையை அடுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 'சிறப்பு புலனாய்வு குழு' புதிதாக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த குழு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கீழ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த குழுவினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள். இதன்மூலம் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் புதிய குழு விசாரணை நடத்தி அதுதொடர்பாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும். இதன் பிறகே ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News