தமிழ்நாடு செய்திகள்

நொச்சிக்குப்பம்-பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு- போராட்டத்துக்கு சீமான் நேரில் ஆதரவு தெரிவித்தார்

Published On 2023-04-18 16:24 IST   |   Update On 2023-04-18 16:24:00 IST
  • 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
  • மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்த சீமான், மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.

சென்னை:

கடந்த 12- ந்தேதி சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் 'லூப்' சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இதை கண்டித்து மீனவர்கள், மீனவப் பெண்கள் நடுரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இன்று 5-வது நாளாக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள், மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. சாலையில் கருப்பு கொடிகளை ஏற்றினார்கள். லூப் சாலையில் நடுரோட்டில் பந்தல்கள் அமைத்து அதில் அமர்ந்து மீனவர்கள் கூட்டம் கூட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மீனவபெண்களிடம் பேசி அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.

நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை சாலையில் மீனவர்கள் கடைகள் அகற்றப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக மீனவர்கள் இங்கு மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

திடீரென மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை அகற்றியது கண்டனத்துக்குரியதாகும். மீனவர்கள் வாழ்வாதாரம் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சாலையில் போராடிவரும் மீனவர்களின் குறைகளை தீர்க்க அரசு செவி சாய்க்க வேண்டும். மீனவர்களுக்கு என்றும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும். மீனவர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News