ரூ.30 கோடி மதிப்பிலான 1 லட்சம் லெதர் ஜாக்கெட் மீன்கள் வலையில் சிக்கின: மீனவர்கள் மகிழ்ச்சி
- லெதர் ஜாக்கெட் மீன்களை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
- மீன்களில் இருக்கும் தோல்களை வைத்து கோட், தொப்பி போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்து வருகிறார்கள்.
ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 700 விசைபடகுகள் இருக்கின்றன. இதில் கடந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை மீனவர்கள் வலையில் லெதர் ஜாக்கெட் மீன்கள் டன் கணக்கில் சிக்கியது.
இந்த லெதர் ஜாக்கெட் மீன்கள் எப்போதும் 100 டன் வரையே கடலில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு மொத்த விசைப் படகுகளில் சேர்த்து 1 லட்சம் டன் லெதர் ஜாக்கெட் மீன்கள் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.30 கோடி.
இந்த லெதர் ஜாக்கெட் மீனை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். லெதர் ஜாக்கெட் மீனை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
அந்த மீன்களின் தோல் கோட், தொப்பி போன்றவற்றை செய்ய பயன்படுகிறது. இதுபற்றி மீனவர் சங்க துணை தலைவர் அருள்குமார் கில்பர்ட் கூறியதாவது:-
லெதர் ஜாக்கெட் மீன்களை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த மீன்களில் இருக்கும் தோல்களை வைத்து கோட், தொப்பி போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இந்த மீனை கிலோ ரூ.300 என்ற விலையில் ஏற்றுமதி செய்கிறோம்.
காசிமேட்டில் இருந்து கொச்சினுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கிருந்து அதிகப்படியாக ஏற்றுமதி செய்கிறார்கள். பின்னர் காசிமேடு மீனவர்கள் ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
எப்போதுமே இந்த மீன்கள் 100 டன் அளவில் தான் கிடைக்கும் ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நேற்று வரை 1 லட்சம் டன் கணக்கில் கிடைத்தது இதுவே முதல்முறை. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த மீனின் தோல் வடிகட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி, சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த மீனுக்கு அதிக கிராக்கி இல்லை. சில ஓட்டல்களில், 'பிஷ் பிங்கர்' தயாரிக்க, இதை வாங்குகின்றனர் என்றனர்.