தமிழ்நாடு

துவரம் பருப்பு விலை ஒரு ஆண்டில் 25 சதவீதம் உயர்ந்தது

Published On 2023-07-02 06:31 GMT   |   Update On 2023-07-02 06:31 GMT
  • இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

சென்னை:

நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துவரம் பருப்பு விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

தென்னிந்தியாவில் சாம்பார், கூட்டு, கடையல், வடை உள்ளிட்ட பல விதமான உணவு வகைகளை தயார் செய்ய துவரம் பருப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வட இந்தியாவிலும் துவரம் பருப்பு சமையலில் பல விதங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போது துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் இந்தியாவில் துவரம் பருப்பு உற்பத்தி 39 லட்சம் டன்னாக இருந்தது. 2022-2023-ம் நிதியாண்டில் துவரம் பருப்பு உற்பத்தி 30 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்ய நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் கூறியதாவது:- இந்தியாவில் துவரம் பருப்பு தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இந்த ஆண்டு 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 லட்சம் டன் துவரம் பருப்பு மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

மீதமுள்ள துவரம் பருப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் வந்துவிடும்.

துவரம் பருப்பு விலையை கட்டுக்குள் வைத்திருக்க கையிருப்பில் உள்ள 50 ஆயிரம் டன் துவரம் பருப்பை சந்தையில் விடவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் துவரம் பருப்பு விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News