தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்- அண்ணாமலை அதிரடி

Published On 2023-03-28 05:16 GMT   |   Update On 2023-03-28 05:16 GMT
  • நீக்கப்பட்டுள்ள கதிரேசன் தி.மு.க.வில் இருந்து வெளியேறி கடந்த ஆண்டுதான் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
  • மாற்றப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதாவில் பொறுப்பு வழங்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட அளவில் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் மாநில தலைமையின் காதுகளை எட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.

மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைபு செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் புதிய மாவட்ட தலைவராக தரணி முருகேசன் அறிவிக்கப்பட்டார். நீக்கப்பட்டுள்ள கதிரேசன் தி.மு.க.வில் இருந்து வெளியேறி கடந்த ஆண்டுதான் பா.ஜனதாவில் சேர்ந்தார். உடனடியாக மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டது.

கூண்டோடு மாற்றப்பட்டாலும் கட்சியின் பொருளாளராக இருந்த தரணி முருகேசன் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே மாற்றப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News