தமிழ்நாடு செய்திகள்

பி.லிட் படிப்புக்கான பாட திட்டத்தை மாற்றக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-09-02 14:40 IST   |   Update On 2023-09-02 14:40:00 IST
  • மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், அந்தப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களின் தமிழ் இலக்கியப் படிப்புக்கு தடை போடும் இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என ஏறக்குறைய 50 கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியம் பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பின் சிறப்புகளில் ஒன்று, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியங்களை மட்டுமே பாடமாகக் கொண்டது என்பது தான். ஆனால், இப்போது மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது தமிழுக்கு செய்யும் அநீதியாகும்.

எனவே, பி.லிட் படிப்புகளில் சிறப்புகளையும், அது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களையும் புரிந்து கொண்டு, பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News