தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்றனர்

Published On 2023-10-16 03:42 GMT   |   Update On 2023-10-16 03:42 GMT
  • கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
  • பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக வழக்கமாக சம்பா, குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சாகுபடி பரப்பை குறைத்தனர். அதேபோல் பயிரிட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலையும் உருவானது.

இந்தநிலையில் கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதற்கிடையே இன்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, பசும்பொன், ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, திருவாடானை, தேவிப்பட்டினம் மற்றும் கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். காற்றின் தாக்கம் அதிகம் இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணியை மீண்டும் தொடங்கி அதற்கான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News