சென்னையில் தனியார் பஸ் விட எதிர்ப்பு: அனைத்து பணிமனை முன்பும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது
- தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.
- சென்னையில் 1000 தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் தனியார் பஸ் இயங்க அனுமதி கிடையாது. தமிழகத்தில் ஆட்சிகள் பல மாறி மாறி வந்தாலும் சென்னையில் மட்டும் தனியார் பஸ்களுக்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது.
ஆனால் இப்போது சென்னையில் 1000 தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 வழித் தடத்தில் 3,233 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள் தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நாள் தோறும் பஸ் சேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை நீடித்த நகர்ப்புற சேவை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 தனியார் பஸ்களை குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.
தொடர்ந்து 2025-ம் ஆண்டு 500 பஸ்கள் என 1000 பஸ்களை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையை வழங்கவே ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இது உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் தங்களின் பஸ்களை சென்னைக்குள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு ஒரு கி.மீ. வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும். நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வரும்போது அதனை மாநகர போக்கு வரத்து கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகர போக்கு வரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கூறுகையில், சென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதை தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உள்பட எந்த தொழிற்சங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே நாளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி எங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவிக்க இருக்கிறோம். பஸ் விட தனியாருக்கு அனுமதிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சருக்கு கடிதம் கொடுக்க இருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே சி.ஐ.டி.யு. நாயனார் கூறுகையில், சென்னையில் நாளை காலை 5 மணிக்கு அனைத்து பணிமனை முன்பும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.