தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்வாக்கு சொல்வதாக கூறி பக்தர்களிடம் 60 பவுன் நகைகள் மோசடி- பூசாரி கைது

Published On 2022-07-12 11:23 IST   |   Update On 2022-07-12 11:23:00 IST
  • தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.
  • நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கமாயா (வயது 42). கடந்த சில மாதங்களாக பாலமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் காய்கறி வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் அருள் வாக்கு கேட்டால் பலிக்கும் என தங்கமாயாளிடம் அப்பகுதியினர் தெரிவித்தனர். இதை நம்பி தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.

அப்போது உங்களின் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும். எனவே உங்கள் வீட்டில் உள்ள நகையை பூஜையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமாயாள் தனது வீட்டில் இருந்த 26 பவுன் 6 கிராம் நகையை பழனிகுமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதற்கு பழனிகுமாரின் மனைவி ரம்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமாயாள் நகை மோசடி குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின்படி பழனிகுமாரை போலீசார் கைது செய்தனர்.

நகை மோசடி தொடர்பாக பழனிகுமார், அவரது மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்திய போது தங்கமாயாளை ஏமாற்றியது போல், அதே பகுதியை சேர்ந்த பலரை ஏமாற்றி இந்த தம்பதியினர் 60 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News