தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
பாதாள சாக்கடை திட்டப்பணியால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்- பொதுமக்கள் அவதி
- பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
- பொன்னேரி- மீஞ்சூர் சாலை அருகில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் காணப்படுவதால் அதில் வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
இந்த நிலையில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் இந்த பள்ளங்கள் சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது.
இதற்கிடையே தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும் தெருக்கள் முழுவதும் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.
இதனால் தெருக்கள் முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன.
ஆலாடு, ரெயில்வே சாலை, வெண்பாக்கம், என்.ஜி.ஓ. நகர், உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் முடிவடையாததால் அப்பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல் பொன்னேரி- மீஞ்சூர் சாலை அருகில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் காணப்படுவதால் அதில் வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட திலகர் தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மழை நீர் வெளியேறாமல் தெருவில் தேங்கி காணப்படுகின்றன.
மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சிதலைவர் பாபு பேச்சு வார்த்தை நடத்தினார். மழைநீர் வெளியேற்ற குழாய் பதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.