தமிழ்நாடு

கருக்கா வினோத் தனியாக சென்று பெட்ரோல் குண்டை வீசும் பரபரப்பான வீடியோ: போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் வெளியிட்டனர்

Published On 2023-10-27 08:55 GMT   |   Update On 2023-10-27 10:40 GMT
  • கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை.
  • கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கவர்னர் மாளிகை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விரிவான அறிக்கையை நேற்று மாலை வெளியிட்டார். அதில் கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டி.ஜி.பி. கவர்னர் மாளிகைக்கும், கவர்னருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கவர்னர் மாளிகை தரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படும் டுவிட்டர் பதிவு இடம் பெற்று இருந்தது.

இதன் பின்னர் கருக்கா வினோத் தனியாக கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நந்தனம் சிக்னலில் இருந்து சைதாப்பேட்டை வழியாக கவர்னர் மாளிகைக்கு நடந்தே சென்று கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகளும் போலீசார் அவனை மடக்கி பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்தன.

இது தொடர்பாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, "கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை. கருக்கா வினோத் மட்டுமே வந்து பெட்ரோல் பாட்டில்களை வீசி உள்ளார். அவர் உள்ளே நுழைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை. போலீசார் 5 பேர்தான் கருக்கா வினோத்தை பிடித்துள்ளனர்" என்றார்.

Tags:    

Similar News