தமிழ்நாடு செய்திகள்

வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2023-09-12 13:12 IST   |   Update On 2023-09-12 13:12:00 IST
  • பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது.
  • ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி வேல் (வயது 65). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஜோதிவேல் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அவரது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதன் அருகே கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன.

பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் முன்பு சிதறிக்கிடந்த பாட்டில் துகள்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா? என்றும் அதில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News