தமிழ்நாடு

நெல்லை அருகே ஆர்.டி.ஓ. வாகனத்தை முற்றுகையிட்டு 9 கிராம மக்கள் போராட்டம்

Published On 2023-11-01 07:04 GMT   |   Update On 2023-11-01 07:04 GMT
  • கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.
  • 9 கிராம மக்களும் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட பாலாமடை ஊராட்சியில் மேல பாலா மடை, இந்திரா நகர், காட்டாம்புளி உள்ளிட்ட 9 குக்கிரமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தலைவராக பதவி வகித்தவர்கள் ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.

அதனை சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்த வேண்டும், சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை பேசி பெற முடியும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை எடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திலும் இது தொடர்பாக அந்த கிராமங்களின் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பாலாமடை பஞ்சாயத்திலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த முறையும் 15 ஆண்டுகளாக நடைபெறும் அதே இடத்தில் வைத்து மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த 9 கிராம மக்களும் இன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சி மன்ற பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆர்.டி.ஓ. கார் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News