தமிழ்நாடு செய்திகள்

ரெயில்-விமான நிலையங்களில் மீண்டும் முக கவசம் அணியும் பயணிகள்

Published On 2022-12-23 10:05 IST   |   Update On 2022-12-23 10:05:00 IST
  • விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை முக கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
  • பயணிகள் மட்டுமின்றி ஊழியர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

சென்னை:

சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா பி.எப்.-7 வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகள் அனைத்தும் உஷாராக தொடங்கி உள்ளது. ஆனாலும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் கொரோனா பி.எப்.-7 நுழைந்து விட்டது.

இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், ஆந்திரா மாநிலங்களில் உருமாறிய கொரோனா வந்து விட்டதால் இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகளை கேசரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, விமான நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல் படி இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை போன்று இப்போதும் பரிசோதனைகள் தொடர உள்ளது.

இதையொட்டி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை முக கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அதன் பேரில் பயணிகள் மட்டுமின்றி ஊழியர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

இதேபோல் ரெயில்களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் முக கவசம் விற்பனை கடைகளில் மீண்டும் விறுவிறுப்படைந்து உள்ளது.

Tags:    

Similar News