தமிழ்நாடு

பல்லடம் அருகே 4 பேர் கொலை: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு- ஆம்புலன்ஸ் சிறைப்பிடிப்பு

Published On 2023-09-05 10:35 GMT   |   Update On 2023-09-05 10:37 GMT
  • போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்துவை திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கைது செய்தனர்.
  • பொதுமக்கள், பா.ஜ.க.வினர் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருேக உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக இருந்தார்.

இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(27) திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24) ,தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார், மோகன்ராஜை வெட்டிக்கொன்றனர். அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, உறவினர் ரத்தினம்மாள் ஆகியோரையும் வெட்டிக்கொன்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலையாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள், பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பல்லடத்தில் 4 மாவட்டத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்துவை திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது வாகன சோதனையில் போலீசார் அவனை மடக்கினர்.

மேலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். வெங்கடேசன் மீது முக்கூடல், சுத்தமல்லி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. தேனியை சேர்ந்த சோனை முத்தையாவையும் தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து கொலையான 4 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கொலையாளிகளான மற்ற 2பேரையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள், பொதுமக்கள், பா.ஜ.க.வினர் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 4 பேர் கொலையை கண்டித்து இன்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதனால் இன்று மதியம் உடல்களை பெற ஒப்புக்கொண்டனர். உடல்கள் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு கள்ளக்கிணறு பகுதிக்குகொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது திடீரென ஆம்புலன்சை சிலர் சிறைப்பிடித்தனர். இறுதி ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென்பதால் ஆம்புலன்ஸ் சிறைப்பிடித்தாக தெரிகிறது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News