தமிழ்நாடு செய்திகள்

தமிழகம்-புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

Published On 2023-11-22 09:51 IST   |   Update On 2023-11-22 12:19:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது.
  • தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே மழை பெய்து உள்ளது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது.

வங்கக்கடலில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீபாவளிக்கு முன்பு மழை பெய்தது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்த போதிலும் வடமாவட்டங்களில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை.

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது.

இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை டி.ஜி.பி. அலுவலகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூா்) தலா 90 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை) 80 மி.மீ., தண்டையாா்பேட்டை, நுங்கம்பாக்கம், அயனாவரம் தாலுகா அலுவலகம், ராயபுரம், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 70 மி.மீ. மழை பெய்து இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

இதையடுத்து மீனவர்களுக்கு வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக் கூடும்.

எனவே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News