தமிழ்நாடு

அரசு கல்லூரிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

Published On 2023-10-04 11:05 GMT   |   Update On 2023-10-04 11:05 GMT
  • பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட முன்வடிவு இயற்றப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது.
  • கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட முன்வடிவு இயற்றப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அரசு கல்லூரிகளுக்கு அயல் பணியில் மாற்றப்பட்டனர். அவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அரசுக் கல்லூரிகளில் அயற்பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணியமர்த்தி, அவர்களுடைய மன உளைச்சலைத் தடுத்து நிறுத்தவும், அவர்கள் பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News