தமிழ்நாடு (Tamil Nadu)

மதுவால் சட்டம்-ஒழுங்கு சீரழிவு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2023-09-05 09:18 GMT   |   Update On 2023-09-05 09:18 GMT
  • கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
  • பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

'பூரண மதுவிலக்கு' என தேர்தல் பிரசாரத்தின்போது மேடைக்கு மேடை முழங்கிய தி.மு.க., இன்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, மது விற்பனையை அதிகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதன் காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பழக்கத்தைத் தவிர்த்து மனிதனாக எல்லோரும் வாழ நடவடிக்கை எடுக்காமல், குடிப்பழக்கத்தை அதிகப்படுத்தி மனித குலத்தை அழிக்கும் பணிகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது, ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

தி.மு.க. அரசின் பூரண மதுக்கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், மதுக்குடித்ததை தட்டிக் கேட்டதால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். மதுவால் சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News