தமிழ்நாடு செய்திகள்

சென்னை காமராஜர் சாலையில் ஜெயலலிதா சிலையை பராமரிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Published On 2022-09-08 14:40 IST   |   Update On 2022-09-08 14:40:00 IST
  • ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
  • முதல்-அமைச்சர் இதில் உடனடி யாகத் தலையிட்டு, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், தமிழ் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களையும் கவுரவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குறை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை அளித்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சித் தலைவி அம்மாவை கவுரவிக்கும் வகையில் சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அவருக்கு 9 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, அந்த வளாகத்திற்கும் அம்மா வளாகம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதுகுறித்து ஏற்கெனவே நான் முதல்-அமைச்சருக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்து இருந்தேன். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடி யாகத் தலையிட்டு, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News