தமிழ்நாடு

புதிய ரேசன் கார்டு வழங்கும் பணி 5 மாதமாக நிறுத்தி வைப்பு: களஆய்வு நடக்காததால் பொதுமக்கள் பாதிப்பு

Published On 2023-11-17 09:33 GMT   |   Update On 2023-11-17 09:33 GMT
  • சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

சென்னை:

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக அரசால் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் புதிய ரேசன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. உணவு வழங்கல் துறை புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை. புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

இதே போல் தனி குடும்ப அட்டைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். பெற்றோருடன் வசித்த குடும்பங்கள் தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எவ்வித பணியும் கடந்த 5 மாதமாக மேற்கொள்ளப்படவில்லை.

சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆகிய நிலையில் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகளை தொடர முடியாமல் உணவு பொருள் வழங்கல் துறையின் வெப்சைட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு 5 மாதமாக நடைபெறவில்லை. துறையில் உள்ள அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன் கள ஆய்வு பணிகள் தொடங்கும். இணைய தளம் வழியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டு வழங்குவதற்கான ஆய்வு பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Tags:    

Similar News