தமிழ்நாடு செய்திகள்

அரசு பெண்கள் பள்ளியில் வெள்ளநீர் வடியாததால் மரப்பாலம் அமைப்பு

Published On 2023-12-13 14:13 IST   |   Update On 2023-12-13 14:13:00 IST
  • பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.
  • ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது.

பூந்தமல்லி:

மிச்சாங் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

எனினும் நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் தொடர்ந்து தேங்கி நின்றது.

இதனால் மழைவெள்ள விடுமுறைக்கு பின்னர் மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்த பள்ளிகளுக்கு நேற்று விரைவிடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி உள்ளதால் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை இன்று திறக்க வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடைபெற்றது. எனினும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை நீரை இன்னும் முழுமையாக அகற்றமுடியவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.

இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவாயிலில் இருந்து வகுப்பறை வரை அவர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பள்ளி திறந்ததும் அந்த பாலத்தில் மாணவிகள் புதிய அனுபவத்துடன் பயந்தபடி வகுப்பறைக்கு நடந்து சென்றனர்.

இதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. அதில் மாணவர்கள் சென்றனர்.

வரும் காலங்களில் மழைகாலத்தில் பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News