தமிழ்நாடு

நங்கவள்ளி அருகே மனைவியுடன் தகராறு- விஷ மாத்திரை தின்று நெசவு தொழிலாளி தற்கொலை

Published On 2023-07-23 04:20 GMT   |   Update On 2023-07-23 04:20 GMT
  • அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
  • சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி கடைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (34), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அவரது மனைவி கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை 2 மகன்களுடன் சூரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

இதையடுத்து கோகிலா தனது குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டு தரக்கோரி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் அண்ணாமலையை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் குழந்தையை கோகிலாவிடம் அனுப்பி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த அண்ணாமலை தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு சன்னியாசி முனியப்பன் கோவில் என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தனது 2 மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மாத்திரைகளை சப்பி பார்த்த குழந்தைகள் கீழே துப்பிவிட்டனர். ஆனால் அண்ணாமலை மாத்திரைகளை விழுங்கியதால் மயங்கினார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News