தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-ந்தேதி கோவை வருகை

Published On 2023-03-01 04:03 GMT   |   Update On 2023-03-01 04:03 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
  • கோவைப்புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்குகிறார்.

கோவை:

கோவையில் வருகிற 5-ந்தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி கோவை வருகிறார். அன்று கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

அன்று பகல் 11.30 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மாலை 4.30 மணிக்கு கொடிசியாவில் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசு வழங்குகிறார். மாலை 5 மணிக்கு கோவைப்புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மின் இணைப்புடன் இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இனி ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு அளிக்கப்படாது. காற்றாலைகளின் மூலம் உற்பத்தி செய்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

உதயநிதி ஸ்டாலின் வருகை தொடர்பாக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவை சிட்ராவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார், கோட்டை அப்பாஸ், கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News