தமிழ்நாடு

கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு டாக்டர்களின் கவனக்குறைவு தான் காரணம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-11-16 07:24 GMT   |   Update On 2022-11-16 07:24 GMT
  • கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் நீர்நிலை ஓரங்களில் உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்நிலைகள் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் கொசு வலைகள் மாநகராட்சியிடம் கையிருப்பில் உள்ளன. சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கப்படுகிறது.

மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. 55 நாட்களில் 76 லட்சம் பேர் முகாம்கள் மூலம் பயன் அடைந்தனர். காய்ச்சல் முகாம் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 48 ஆயிரம் முகாம்கள் நடந்துள்ளன.

சென்னையை பொறுத்தவரை 3,362 முகாம்கள் நடத்தப்பட்டதில் 2.33 லட்சம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். டெங்கு, மலேரியா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

டெங்கு காய்ச்சலால் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

மரண இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த சம்பவம் கவனக்குறைவாக நடந்துள்ளது என்று நான் விளக்கமாக கூறி உள்ளேன்.

ஆனால் சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 150 பேர் உயிரிழந்தனர். அந்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் கடவுள் விதி என்று கூறியுள்ளது. நாங்கள் அதுபோல கூறவில்லை. கவனக்குறைவாக நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஒன்று இரண்டுபேரின் கவனக்குறைவு, அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News