தமிழ்நாடு செய்திகள்

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்- அமைச்சர் தகவல்

Published On 2023-07-12 14:43 IST   |   Update On 2023-07-12 14:43:00 IST
  • தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதிற்குள்ளும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையிலும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் கோவில்கள் சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500 வழங்கப்படுகிறது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதிற்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதிற்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதிற்குள்ளும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதிற்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதிற்குள் இருப்பதோடு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த கோவில்களின் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அந்தந்த கோவில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News