தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2023-04-05 07:15 GMT   |   Update On 2023-04-05 07:27 GMT
  • சென்னையை சுற்றி 32 கிலோமீட்டர் பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய எம்.எல்.ஏ.க்கள் பலர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு பட்டா கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சென்னையை சுற்றி 32 கிலோமீட்டர் பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பட்டா வழங்குவது இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. இப்போது பல ஆண்டுகளாக அங்கு குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்கு வதில்லை.

எனவே பெல்ட் ஏரியா என்கின்ற அந்த சட்டத்தை எடுக்க வேண்டும். அல்லது புதிதாக சட்ட விதிகளை உருவாக்கி பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு எம்.எல். ஏ.க்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

இந்த பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது. சென்னையிலும் 32 கி.மீ பெல்ட் ஏரியாவாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பும் அதை உறுதி செய்வதாக தான் உள்ளது.

இதை எப்படி செய்யலாம், எப்படி பட்டா வழங்கலாம், எத்தனை வருடம் வாழ்கிறவர்களுக்கு வழங்கலாம், புதிதாக குடியிருப்பவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து சாதக பாதகங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

அவசர கோலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை அல்ல, பொறுமையாக தான் எடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரிடம் பேசி சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News