தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 10ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-08-20 09:09 IST   |   Update On 2023-08-20 09:09:00 IST
  • தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணையில் தற்போது 20.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

அணையில் இருந்து தொடர்ந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும், மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டது. மேலும் அணையில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 17-ந் தேதி நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரத்து 260 கனஅடியாக இருந்தது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணையில் தற்போது 20.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் பாசனத்திற்கு 6ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நேற்று 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News