மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரத்து 343 கனஅடியாக அதிகரிப்பு
- வழக்கமாக கர்நாடகாவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு 48 மணி நேரத்தில் வந்து சேரும்.
- கர்நாடகாவில் இருந்து தற்போது 24ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாததால் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீர்வரத்து வினாடிக்கு 200 அடிக்கு கீழே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர்வரத்தை விட அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் தினமும் 1 அடி குறைந்து வருகிறது.
இந்த நிலையில் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் இருந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் முதல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த சனிக்கிழமை கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 4ஆயிரத்து 897 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வழக்கமாக கர்நாடகாவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு 48 மணி நேரத்தில் வந்து சேரும். அங்கிருந்து 6 மணி நேரத்தில் மேட்டூர் அணையை வந்தடையும். ஆனால் தற்போது நீர்வரத்து இன்றி காவிரி ஆறு வறண்டு கிடந்ததால் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை இரவு தான் பிலிகுண்டுவுக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து நேற்றிரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்தொடங்கியது. நேற்றிரவு 10 மணி அளவில் வினாடிக்கு 2ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரத்து 343 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 64.87 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறறப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கர்நாடகாவில் இருந்து தற்போது 24ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது. எனவே படிப்படியாக அந்த தண்ணீரும் வரத் தொடங்கிவிடும். நீர்வரத்து 24ஆயிரம் கனஅடியாக அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமை பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.