தமிழ்நாடு செய்திகள்

மாதவரம் ரவுண்டானா அருகே மெட்ரோ ரெயில் பணியில் குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்

Published On 2022-12-19 15:13 IST   |   Update On 2022-12-19 15:13:00 IST
  • குழாயில் இருந்து கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி மாதவரம் ரவுண்டானா மற்றும் அதை சுற்றியுள்ள சாலையோரங்களில் குளம் போல் தேங்கியது.
  • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

கொளத்தூர்:

அம்பத்தூர், கொரட்டூர், அண்ணா நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் ராட்சத குழாய் மூலம் ரெட்டேரி வழியாக கொடுங்கையூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மாதவரம் ரவுண்டானா அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றது. அப்போது தரையின் கீழ் 3 மீட்டர் ஆழத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

குழாயில் இருந்து கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி மாதவரம் ரவுண்டானா மற்றும் அதை சுற்றியுள்ள சாலையோரங்களில் குளம் போல் தேங்கியது.

இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாதவரம் ரவுண்டானா பகுதியை கடந்து செல்ல சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இதுபற்றி அறிந்ததும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் குழாய் அடைப்பை சரிசெய்து தேங்கிய கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News