தமிழ்நாடு

கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: பாளை கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜனதா- தமிழ் அமைப்பினர் இடையே கடும் வாக்குவாதம்

Published On 2023-03-07 08:33 GMT   |   Update On 2023-03-07 08:33 GMT
  • குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையிலான பா.ஜனதாவினர், முருகானந்தம் தலைமையிலான இந்து முன்னணியினரும் கருத்து தெரிவித்தனர்.
  • வியனரசு தலைமையிலான தமிழ் தேச தன்னுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கருத்து கூறினர்.

நெல்லை:

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பாளையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், சுகிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து ஆர்வலர்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய உடன் சிலர் மேடை அருகே சென்று அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள்கள் படம் இடம்பெறவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்து கடவுள்கள் படம் மாட்டப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது தமிழ் பாடல்களை சேர்ப்பது தொடர்பாக குழு உறுப்பினர் சுகிசிவம் பேசிய கருத்துக்கு சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையிலான பா.ஜனதாவினர், முருகானந்தம் தலைமையிலான இந்து முன்னணியினரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் வியனரசு தலைமையிலான தமிழ் தேச தன்னுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கருத்து கூறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து மாநகர துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News