கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலி- நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை
- நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.
- கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுவாஞ்சேரி:
சென்னை, பட்டாபிராம், பாரதியார் நகர் மருதம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் கார்த்திகேயன்(21) இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு தெரியாமல் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் உள்ள குட்டையில் நேற்று மாலை குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் நீச்சல் தெரியாத கார்த்திகேயன் ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் திடீரென மூழ்கினார். அப்போது இவர்களுடன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது கார்த்திகேயனுடன் வந்த நண்பர்கள் 4 பேரும் கார்த்திகேயன் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அவரை தண்ணீரில் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் வெகு நேரமாக தேடிப்பார்த்தனர். பின்னர் இரவு நேரம் என்பதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மீண்டும் இன்று காலை 8:30 மணி அளவில் இருந்து மறைமலைநகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தேடியும் உடல் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து சென்னை மெரினா பீச் காவல் நிலையத்தில் உள்ள 9 பேர் கொண்ட (ஸ்கூபா) நீர்மூழ்கி வீரர்கள் வந்து தண்ணீரில் அரை மணி நேரம் தேடினர். அப்போது காலை 11:30 மணி அளவில் கார்த்திகேயனின் சடலம் கிடைத்தது. இதனை அடுத்து கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனுடன் படித்து வந்த அவரது நண்பர்களான மோகன், வருண், அகத்தீஸ்வரன், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் காயார் போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து 4-வது முறையாக நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.