தமிழ்நாடு

கருணாநிதியின் லட்சியம் நிறைவேற உழைப்போம்- டுவிட்டரில் பதிவிட்டு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published On 2023-06-12 06:28 GMT   |   Update On 2023-06-12 06:28 GMT
  • சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையினை திறந்து வைத்தார்.
  • மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்தார். நேற்று அவர் சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையினை திறந்து வைத்தார். தொடர்ந்து சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாலையில் அவர் மேட்டூருக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் 1998-ம் ஆண்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த சமத்துவபுரத்தில் ரூ.47 லட்சம் செலவில் 94 வீடுகளுக்கு வெள்ளை அடித்தல் மற்றும் சிறு பழுது நீக்கப் பணிகளும், ரூ.44.20 இலட்சம் செலவில் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, சமத்துவபுர வளைவு ஆகிய இதர பொது கட்டமைப் புகளுக்கான பழுது நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின்போது சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்களிடம் அங்குள்ள சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து டுவிட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன். 1998-ஆம் ஆண்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள்-சாலைகள் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கிச் சீரமைக்கும் பணிக்குக் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம். தற்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் பற்றிக் கேட்டறிந்தேன்.

அப்போது அங்கிருந்த மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர். அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நாடெங்கும் பரவி, நாடே சமத்துவபுரமாகிட வேண்டும் என்ற கலைஞரின் கனவு என் எண்ணங்களில் ஓடியது. கலைஞர் நூற்றாண்டில் அவரது லட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவச் சமுதாயம் அமைத்திட உழைப்போம்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News